அக்டோபர் 08, 2011

உங்கள் வீட்டில் கைக்குழந்தைகள் இருக்கிறார்களா..?


பிறந்த குழந்தையை முதல் ஒரு வருடம் வளர்ப்பது என்பது எல்லாப் பெண்களுக்குமே ஒரு சவாலான விடயம். மிக ஜாக்கிரதையாக, மிக கவனமாக பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டிய நேரம் அது. சின்னப் பிரச்னைகூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகக்கூட வரலாம்.

அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத இளம் தாய்களுக்கு கைக் குழந்தையை வளர்ப்பதில் பல சந்தேகங்கள் தோன்றும். அவர்களுக்குரிய அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கம் தருகிறார் டாக்டர் பாலச்சந்திரன்.
குழந்தை பிறந்தவுடன் எத்தனை நாளில் தாய்ப்பால் தர வேண்டும்?

எத்தனையாவது நாளிலா? பிறந்த அரை மணி நேரத்திலேயே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் துவங்கிவிட வேண்டும். சொல்லப்-போனால்... தாய்ப்பால் கொடுப்பது-தான் குழந்தைக்காக எடுக்கப்படும் முதல் நோய் தடுப்பு முயற்சி! தாய்ப்பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வு, குழந்தைக்கு இயல்பாகவே ஏற்படுகிறது.


என் மார்பகம் சிறியதாக இருக்கிறது... தாய்ப்-பால் சுரக்குமா? சுரக்கும் தாய்ப்பால் குழந்-தைக்கு போதுமானதாக இருக்குமா?

மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பலமுறை பலராலும் பதிலளிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், விளக்கமாச் சொல்கிறேன்! குழந்தை மார்பகத்தை கவ்விப் பிடிக்கும்போது, தாயினுடைய பெருமூளைப் பகுதியின் அடிப்-பாகத்தில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி, ஆக்ஸிடோஸின் என்ற திரவத்தை சுரக்கிறது. உடனடியாக... மார்பகத்தில் தாய்ப்பால் சுரக்கும்.
இதை-யும் தெரிந்து கொள்ளுங்கள்... குழந்தை பால் குடிக்கும் அந்தந்த நேரத்தில் ஃப்ரஷ்ஷாக அது குடிப்ப-தற்கேற்ற சரியான வெதுவெதுப்பில், குடிப்பதற்கேற்ற அடர்த்தியில்தான் தாய்ப்பால் சுரக்கிறது!

குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கும், தாயிடம் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே! இது குழந்தைக்கு நல்லதா?


ரொம்ப ரொம்ப! குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால்தான் கொலஸ்டிரம் என்றழைக்கப் படுகிறது. வெண்மைக்கும், மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிறத்தில் தண்ணீரைப் போல இருக்கும் கொலஸ்டிரத்தில், திடப்பொருள்கள் அதிகமாக இருக்காது. ஆனால், சுகர், லேக்டோஸ் மற்றும் புரதச் சத்துக்கள் இந்த சீம்பாலில் எக்கச்சக்கம்! தாயின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்துக்கள் சீம்பால் மூலமாக குழந்தைக்கு முழுமையாகக் கிடைக்கிறது. அதனால், முதல் மூன்று நாட்களுக்குச் சுரக்கும் சீம்பாலை, கண்டிப்பாக குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

ஆனால், சீம்பால் கொடுத்தால் பேதியாகும் என்று கூறுகிறார்களே?

கொலஸ்டிரம் குடலைச் சுத்தம் செய்வதால், அப்போது வெளியேறும் மலம், பேதி போலத்தான் இருக்கும். இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை! இதற்கு பயந்து, பலவகை சத்துக்களை உள்ளடக்கிய கொலஸ்டிரம்பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறவே கூடாது. ஒரு சிலர், குழந்தைக்கு முதலில் கழுதைப் பால் தான் கொடுக்க வேண்டும் என்ற சடங்கைப் பின்பற்றுவதற்காக, சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் தரையில் பிழிந்துவிட்டு விடுவார்கள். இது மாதிரி நாம் நம்முடைய குழந்தைக்கு வேறு எந்தக் கொடுமையையும் செய்ய முடியாது! இன்றும், பல பிரசவ மருத்துவமனைகளுக்கு வெளியே கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆனால், சுகாதாரமற்ற கண்ட கண்ட பாலையும் வாங்கிக் குழந்தைக்குப் புகட்டுவது, தொற்று நோய்களை வரவேற்பதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதற்கு சமம்! இது தேவையா?

ப்ரீமெச்சூர் அதாவது குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே பிறந்துவிடும் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கும் சக்தி இருக்காது என்கிறார்களே?

உண்மைதான்! ஆனால்... தாய் மனது வைத்தால் குழந்தைக்கு மென்மையாக, உறிஞ்சக் கற்றக் கொடுக்கலாம். ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கு தேவைப்படுவது தாயின் வெதுவெதுப்பும், அரவணைப்பும்தான். குழந்தையை உடலோடு அணைத்துக் கொண்டு, உணர்வுரீதியான ஒரு ஒட்டுறவை தாய் முதலில் குழந்தையுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உறவுப் பாலம் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. அப்புறம் அடுத்தடுத்த ஸ்டெப்களில் மெல்ல மெல்ல குழந்தை, பாலை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கும். போகப் போக, பால் குடிக்கும் ஸ்பீடு அதிகரித்து, நார்மல் குழந்தையின் வேகத்தை எட்டிவிடும்...!

குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

ரொம்ப சிம்பிள்! ஒரு நாளில் குழந்தை கிட்டத்தட்ட நான்கு முறைகள் மலம் கழிப்பதாலும், ஆறு டயப்பர்களை நனைக்கும் அளவுக்கு மூச்சா போவதாலும், பொதுவாகவே பிறந்தவுடனே குழந்தைகளின் எடை குறையும். போதுமான அளவு தாய்ப்பால் கிடைத்தால், பதினைந்தே நாட்களில் வெயிட் ஏறி, பிறக்கும் போது இருந்த எடைக்கு மீண்டும் திரும்பி விடும். இதற்குப் பிறகு, வாரத்திற்கு 150_250 கிராம் என்ற கணக்கில் குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும். இந்தக் கணக்கு சரியாக இருந்தால், உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்-கிறது என்றுதான் அர்த்தம்!


இரண்டே மாதங்களான சில குழந்தைகளுக்கு மாறுகண் போலத் தெரிகிறதே?

பயப்பட வேண்டாம்! பிறந்த சில நாட்களில், குழந்தை அருகில் உள்ள பொருட்களை வேடிக்கை பார்க்கத் துவங்கும். அப்படி பார்க்கும்போது, சில நேரங்களில் மாறுகண் விழுவது சகஜம்தான்! 4 மாதங்கள் வரை இப்படி மாறுகண் தோன்றுவதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். அதற்கு பிறகும் தொடர்ந்தால்... மருத்துவரை அணுகலாம்.

குழந்தையின் மார்புக் காம்பில் வீக்கம் இருக்கிறது. சில நேரங்களில் வெள்ளைத் திரவம் வெளியேறுகிறது. இதைப் பிழிந்து எடுக்கலாமா?

தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் இயற்கையான ஹார்மோன்களால், சில நேரங்களில், குழந்தையின் மார்புக் காம்புகளிலிருந்து வெள்ளைத் திரவம் கசிகிறது. இதைப் பிழிந்து எடுக்கக்கூடாது. 3_4 மாதங்களில் இந்தக் கசிவு தானாகவே நின்றுவிடும்.

பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பிலிருந்து வெள்ளை திரவம் கசிகிறது. சில நேரங்களில் பீரியட்ஸ் ஆனது போல இரத்தம் கூட வெளியேறுகிறதே?

இதற்கும் காரணம் அம்மாவின் பாலில் இருந்து கிடைக்கும் இயற்கை ஹார்மோன்கள்-தான். குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த நிலை தானாகவே சரியாகிவிடும். அப்படி இல்லையென்றால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

பிறந்த ஆண் குழந்தையின் விதைப் பையில் வீக்கம் இருக்கிறதே?

விதைப்பையில், ஹைட்ரோஸீல் (Hydrocele) என்ற ஒரு வகை திரவம் தேங்கி இருப்பதால், வீக்கம் உண்டாகக்கூடும். குழந்தை பிறந்து முதல் சில மாதங்களில் வீக்கம் சரியாகவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

குழந்தைக்கு இன்னும் உச்சந்தலையில் உள்ள எலும்புகள் சேரவில்லையெனில்! அங்குத் தண்ணீர் படலாமா?

தாராளமாக! தலையை தண்ணீர் விட்டு அலசலாம். பயம் ஒன்றும் இல்லை.

பிறந்த குழந்தையின் உடல் திட்டு திட்டாக பச்சை நிறமாக இருக்கிறதே? குழந்தைக்கு ஆபத்தோ என்று பயமாக இருக்கிறது!

கவலை வேண்டாம்! தோலின் நிறத்தை தீர்மானிக்கும் மெலனின் என்ற வஸ்துதான் பச்சை நிறத்தில் திட்டு திட்டாக காட்சியளிக்கிறது. குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் முடிவதற்குள், இந்த நிலைமை சரியாகிவிடும்.

குழந்தையின் உடலெங்கும் சிகப்பு முடிச்சுக்கள் இருக்கிறதே... ஏதாவது அலர்ஜியா?

இல்லை! சில நேரங்களில், இரத்தக் குழாய்கள் தோலுக்கு வெளியே இப்படி ஸ்பெஷல் தரிசனம் கொடுப்பதுண்டு. இந்த நிலைக்குப் பேர் ஹிமாஞ்சியோமாஎன்பார்கள். இந்த முடிச்சுகளை கையால் அழுத்தக்கூடாது. சிறிது காலத்தில் தானே போய்விடும் என்றாலும், மருத்துவ ஆலோசனை பெறுவதில் தவறொன்றும் இல்லை.

குழந்தைக்கு, தொப்புள் கொடி விழுந்த போது, சில இரத்தத் துளிகள் வெளியேறியது. இப்போது அந்த இடத்திலிருந்து ஒரு வகை திரவம் சுரக்கிறது. தொப்புள் வேறு துருத்திக் கொண்டு நிற்கிறது. ஏதாவது பிரச்சினையா?

தொப்புள் துருத்திக் கொண்டு நிற்பதால் பிரச்சினை ஒன்றுமில்லை. கொடி விழுந்த ரணப்பகுதி ஆறுவதற்கு ஒரு சிம்பிள் வைத்தியம் இருக்கிறது. ரணப் பகுதியில் சிட்டிகை உப்புத் தூளைப் போட்டு இரண்டு துளி வெந்நீரை தெளித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த வைத்தியத்தை தினமும் இரண்டு முறை தொடர்ந்து நாலைந்து நாட்களுக்கு செய்து வந்தால், ரணம் ஆறிவிடும். ஆனால்... தொப்புளைச் சுற்றி சிகப்பு கோடுகளோ அல்லத ஒருவித துர்நாற்றமோ இருந்தால், மருத்துவரைத்தான் அணுக வேண்டும்.

குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல், வயிற்றுப் போக்கு என்று வருகிறதே...? இது சகஜமாக வந்து போவதுதான் என்றாலும், இதுபோன்ற நோய் வரும்போது, அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது?


கவலைவேண்டாம் இதோ, கீழேயுள்ள அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு வரும் பட்சத்தில் குழந்தை சீரியஸாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்...
சளியின்போது... - 3 நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால்... - இருமலில் மஞ்சள் நிற சளி வெளியேறினால்... - மூக்கிலிருந்து பச்சைநிற திரவம் ஒழுகினால்... - குழந்தைக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால்...

ஜுரம் வரும்போது... - குழந்தையின் வயது இரண்டு மாதத்திற்கும் குறைவாக இருந்தால்... - மருந்துக்கு கட்டுப்படாத... 105 டிகிரிக்கும் கூடுதலான ஜுரம் என்றால்... - மூச்சுவிட சிரமப்பட்டால்... - குழந்தைக்கு மயக்கநிலை ஏற்பட்டால்.

இருமல் வரும்போது... - வறட்டு இருமலாக இருந்தால்... - மூச்சுத் திணறல் ஏற்பட்டால்... - குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு மோசமான இருமலாக இருந்தால்.

வயிற்றுப் போக்கு வரும்போது... - இரண்டு வார காலத்துக்கும் கூடுதலாக வயிற்றுப் போக்கு தொடர்ந்தால்... - மலத்தில் இரத்தம் வெளியேறினால்... - 3 நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால்... - யூரின் அளவு குறைவாக இருந்தால் (ஒரு தினத்துக்கு 3 டயப்பர்களைக்கூட பயன்படுத்தாத நிலை) - குழந்தையின் நாக்கு, உதடு உலர்ந்து போதல், கண் சொருகுதல் போன்றவை இருந்தால்... - மூச்சுவிட சிரமப்பட்டால்... - தாய்ப்பால் குடிக்க மறுத்தால்...

வாந்தி வரும்போது... - 24 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து குழந்தை வாந்தி எடுத்தால்... - யூரின் அளவு குறைந்தால்... - உதடும், நாக்கும் உலர்ந்து போய், குழந்தையின் கண் சொருகினால்... - வாந்தியில் இரத்தம் வந்தால்... - கரும்பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால்... - மயக்கநிலை ஏற்பட்டால்...

இதுபோல எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

பிறந்த இரண்டு மாதத்திற்குள் குழந்தைக்கு ஜுரம் வந்தால் ஆபத்தா, ஏன்?

நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்க் கிருமிகளுடன் போராடும் போதுதான் ஜுரம் உண்டாகிறது, இரண்டு மாதக் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் இருப்பதால்தான், அந்த நிலையில் ஜுரம் ஏற்படும் போது, டாக்டர்களுக்கு கவலையைத் தரு-கிறது.

வயிற்றுப் போக்கு ஏற்படும்போது, தெளிவான திரவ உணவு (Clear liquids) கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிளியர் லிக்விட்ஸ்என்றால்?

கட்டிகள் இல்லாத திரவ உணவு. உதாரணமாக இளநீர், சாதம் வடித்த கஞ்சி + உப்பு, காய்கறி வேகவைத்த நீர் + உப்பு, பருப்பு வேகவைத்த நீர் + உப்பு, ஓ.ஆர்.எஸ். (ORS - Oral Rehydration Solution) (தண்-ணீர் + உப்பு + சர்க்கரை கலவை).

உடல் சரியில்லாத நிலையில், குழந்தைகளை குளிப்பாட்டாமல் இருக்கும்போது, தலையில் குழந்தைகளுக்கு அடை அடையாக அழுக்கு நிற்கிறதே! அதற்கு என்ன செய்வது?

சரிதான் போங்க! ஏதோ குழந்தையை குளிப்பாட்ட வேண்டாமென்றால் உடம்பைக் கூடவா துடைக்காமல் இருப்பது? வெது வெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த டவலைக் கொண்டு, குழந்தையின் தலை மற்றும் உடலை தினசரி துடைத்து வந்தால், இதைப் போன்ற அழுக்கடைகள் நிற்காது. சரி, வந்துவிட்டது! இனி என்ன செய்யலாம்? சிட்ரிமைட் லோஷனை (Cetrimide Lotion) பயன்படுத்தினால், அழுக்கடைகள் போயே போச்சு! இட்ஸ் கான்!

குழந்தையின் மூக்கடைப்பை சரி செய்வதற்கு, மூக்கில் மெடிகேட்டட் டிராப்ஸ் விடுவது நல்லதா?

மெடிகேட்டட் டிராப்ஸை அளவாக, டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், சளி ஜவ்வு பாதிக்கப் படக்கூடிய ஆபத்து இருக்கிறது. மெடிகேட்டட் டிராப்சுக்கு பதிலாக நேஸல் சலைன் டிராப்ஸை பயன் படுத்தலாம். இப்போது கடைகளில், சளியை உறிஞ்சக் கூடிய மியூக்கஸ் ஸக்கர் பல்புகள் (Mucus Sucker bulbs) கிடைக்கிறது. மருத்துவ ஆலோசனை பெற்று இதையும் பயன் படுத்தலாம்.

குழந்தைக்கு சளி பிடித்திருக்கும்போது திரவ ஆகாரம் தந்தால் நல்லது என்கிறார்களே! நிஜமா?

ரொம்பச்சரி.. காரணம், சளி உள்ளபோது மூச்சு அதிகமாக வெளியேறுவதால், உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. அதை ஈடுகட்டுவதற்காக திரவ ஆகாரத்தை அதிகமாக உட்கொள்ளலாம். கைக் குழந்தைகளுக்கு, தாய்ப்-பாலின் அளவை அதிகரியுங்கள். நன்றி - குமுதம்

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்