ஜூன் 17, 2011

இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியம் !

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம். 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர். 

இஸ்லாம் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு வலியுறுத்தியுள்ளது?

இஸ்லாம் சுத்தத்தை வழியுருத்துவதைப்போல் உலகில் வேறு எந்த மதமும் வழியுருத்தவில்லை.

தூய்மை என்பது ஈமானின் பாதி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 328)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மனிதர்களில் அதிகமானோர் இரண்டு. அருட்செல்வங்களின் வியத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.  1.ஆரோக்கியம்  2.ஓய்வு.   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)

நோயற்ற வாழ்வே ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்குமான ஒரு உந்துகோளாக அமைகின்றது. நோயற்ற வாழ்விற்கு தூய்மை முதல் இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டுகின்றது.

நாளின் துவக்கத்திலேயே இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியத்தில் கூட உடல், உள சுத்தத்தையே வலியுறுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   உங்களில் ஒருவர் உளுச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளு செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார்.  அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள் (நூல்: புகாரி 162)
  
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளுச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் தான் தங்கியிருக்கின்றான்.   
அறிவிப்பவர்:அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 3295)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்துதூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கைகள் உறங்கும்போது எங்கே கிடந்தன என்று அறியாத காரணத்தினால் கைகளை முதலில் கழுவிக் கொள்ளுமாறும்; மூக்கிற்கு தண்ணீர் செலுத்துமாறும் நபி(ஸல்)அவர்கள் கட்டளை இடுகிறார்கள். 

ஏன் என்றால் மூக்கின் நாசிப்பகுதியல் ஷைதான் தங்கி இருக்கிறான் என்று கூறுகிறார்கள். 

இங்கு ஷைதான் தங்கியிருக்கிறான் என்றால் அழுக்குகள் தங்கியிருக்கிறது என்று பொருளாகும். நபி(ஸல்)அவர்கள் ஏதாவது தீங்கான செயல்களைக் குறிப்பிடும் போது ஷைதானுடன் ஒப்பிட்டு கூறுவார்கள்.இது போன்று ஏராளமான செய்திகளில் நபி(ஸல்)அவர்கள் தீங்கான விஷயங்களுக்கு ஷைதானை ஒப்பிட்டு கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் மலஜலம் கழித்துவிட்டு சுத்தப்படுத்துமாறு கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். 

மேலைத்தேய நாடுகளில் மலஜலம் கழித்துவிட்டு முறையாக சுத்தம் செய்யாத காரணத்தினால் அவர்கள் அடிப்படை சுகாதார அறிவற்றவர்களாகவும், தூய்மையில் பின் தங்கியவர்களாகவும் உள்ளனர். 

ஏன், நம் நாட்டவர்கள் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடம் கூட சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யும் பழக்கம் காணப்படுவதில்லை. இதனால் இவர்கள் இலகுவாக சிறுநீர் சம்பந்தமான தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், இஸ்லாம் நாம் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கே வழிகாட்டுகின்றது.

மூக்கிலுள்ள நுண்ணிய மயிர்கள் வெளியிலிருந்து மூக்கிற்குள் வரும் தூசு, துணிக்கைகளை அகற்றக்கூடியவையாகவுள்ளன. அத்துடன் ஐந்து நிமிடங்களிற்கு ஒரு முறை மூக்கினுள் சளி சுரக்கப்பட்டு இதுவும் வெளியிலிருந்து மூக்கினுள் வரும் அந்நிய பதார்த்தங்கள் உடலினுட் செல்லாமல் உடலைப் பாதுகாக்கின்றது. இச்சளி அந்நிய பதார்த்தங்களுடன் மூக்கில் தேங்குகின்ற காரணத்தினால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் பக்டீரியாக்கள் இலகுவாக நுரையீரலுக்கள் நுழையும் அபாயம் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளுச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 160, 164)

எனவே தூக்கத்திலிருந்து எழுந்தவுடனும், ஐவேளை உளுச் செய்யும்போதும் மூக்கை சுத்தம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தி நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மார்க்கமாக விளங்குகின்றது.

பற் சுத்தம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். 
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 7240)

இன்று அநேகமானோர் பற் சுகாதாரத்தைப் பேணாததால் நிறைய பல் வியாதிகளால் அவதிப்படுகின்றனர். மனிதன் சாப்பிடுவதோ மூன்று வேளை. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முடியுமானால் ஐவேளை பல் துலக்குமாறு கட்டளையிடுகின்றார்கள். அதாவது மனிதர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் தான் கட்டாயமாக செய்யும்படி தாம் வலியுறுத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வாய், பற் சுகாதாரத்தைப் பேண வலியுறுத்துகின்றார்கள். 

பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்று பொதுவாக சொல்வார்கள். அதாவது வாய், பல் சுகாதாரம் பேணப்படாதவிடத்து வாய்க்குள் ஏற்படும் கோளாறுகளால் உணவு உட்கொள்ள முடியாமல் மனிதன் ஆரோக்கியத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

British Medical Journal (BMJ)  ஆய்வின்படி பல் துலக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இருதய அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின்படி வாயிலுள்ள குறிப்பிட்ட இரு பக்டீரியாக்களில் ஒன்றின் மூலம் 50மற்றையதின் மூலம் 35%  இருதய அடைப்பு ஏற்படுவதற்குரிய அபாயம் காணப்படுகின்றது. பல் துலக்கல், வாய் சுகாதாரம் பேணப்படாதவிடத்து இருதய நோய்களுக்கான அறிகுறிகள் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்பாதிப்பு மனிதனுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைக்கு முன் பல் துலக்கலை கடமையாக்க நினைக்கும் அளவிற்கு வலியுறுத்துகிறார்கள். 

இஸ்லாம் போன்ற ஒரு இனிய மார்க்கத்தை உலகில் எந்ந இடத்திலாவது காணக் கிடைக்குமா?

கண்களின் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன்.

நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர் ! (சில நாட்கள்) நோன்பு வையும், (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும் (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!   அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள்   நூல்: புகாரி 1975 

மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்துள்ள இக்காலகட்டத்தில், மனிதனின் நவீன கண்டுபிடிப்பு சாதனங்கள் சிலதின் மூலம் மனிதன் அவனது கண்களின் ஆரோக்கியத்தை இழந்தவனாகக் காணப்படுகின்றான். அவற்றில் சில தொலைக்காட்சிப்பெட்டி, கணனி ஆகியன. இவற்றின் பாவனை இடைவிடாது தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் கண்கள் பார்வையைப் படிப்படியாக இழக்கின்றன. மனிதன் கண்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வைக் கொடுக்கத் தவறியமையே இதற்குக் காரணம். 

இதனாலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்லித் தருகின்றார்கள். மனிதனது கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். இதற்கு முறையான உறக்கமே சிறந்த வழி. ஆனால் இன்று பொருளாதாரத்தை மையமாக வைத்து உலக மக்கள் அனைவரும் இயங்குவதால் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லாமல் இரவு, பகல் பாராமல்  உழைக்கத் தழைப்பட்டுள்ளனர். பெரும்பாலான இள வயதினர் பொழுதுபோக்கிற்காகவும், தம் நேரங்களை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்ற ரீதியில் தொலைக்காட்சியிலும், கணனியிலும் தங்கள் நேரங்களை செலவிட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தங்கள் கண் பார்வையில் பிர்ச்சினை ஏற்படும் வகையில் தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள்.

எனவே, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நம் உடலுக்கும், கண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வோமேயானால் உடலினதும், கண்களினதும் ஆரோக்கியம் கெடாமல் வாழலாம்.

தோல் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தினத்தில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல்: புகாரி 858)

சில தண்ணீர் வசதியில்லாத பிரதேசங்களைப் பொருத்தமட்டில் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியமில்லை. சில நோயாளிகளைப் பொருத்தமட்டிலும் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியப்படாமல் போகலாம். இவ்வனைத்தையும் கருத்திற் கொண்டு இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்தும் மார்க்கமாக உள்ளதால் கிழமைக்கு ஒரு முறையாவது அதாவது ஜும்ஆ தினத்தன்று குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமை என்று வலியுறுத்துகின்றது. 

வியர்க்கும் போது தோலிலுள்ள வியர்வைத் துவாரங்களின் மூலம் வியர்வை வெளியேறி தோலில் படிகின்றது. குளித்து சுத்தமாகும்போது தோலிலுள்ள இக்கழிவுகள் அகற்றப்பட்டு வியர்வைத் துவாரங்கள் அடைபடாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு கிழமைக்கு மேலாகவும் குளிக்காமல் இருந்தால் வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது. 

இஸ்லாத்தைப் பொருத்தளவில் ஐவேளைத் தொழுகைக்கு வுழூ செய்யும்போதும் முகம், கை, கால், மூக்கு, வாய், காது, தலைமுடி ஆகியவை சுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே, கடமை தவறாத ஒரு முஃமினானவன் எந்ந வேளையிலும் சுத்தத்தைப் பேணியவனாகவே இருப்பான்.

நகங்களை வெட்டி அகற்றப்படவேண்டிய முடிகளை அகற்றி ஆரோக்கியம் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1.விருத்தசேதனம் செய்வது. 2.மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது. 3.அக்குள் முடிகளை அகற்றுவது. 4.மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 6297)

மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடியைக் களைவது, மர்ம உறுப்பு முடியைக் களைவது ஆகியவற்றுக்கு நாற்பது இரவுகளை விட விட்டு வைக்கக்கூடாது என நாங்கள் நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 379)

நகங்கள் வளர்ந்து அதனுள் அழுக்குகள் தேங்குவதால் உணவு உட்கொள்ளும்போது அவையும் உணவுடன் சேர்ந்து சமிபாட்டுத் தொகுதிக்குள் சென்று உணவு சமிபாட்டில் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்திபேதி, உணவு நஞ்ஞாதல் போன்ற நோய்கள் ஏற்படும். அத்துடன் அக்குள் முடி, மர்ம உறுப்பு முடி ஆகியவற்றைக் களையாதவிடத்து வியர்வையின்போது வியர்வை அவ்விடங்களில் படிந்து பக்டீரியாக்களின் தாக்கம் அதிகரிக்கும். 

ஆனால், இஸ்லாம் நாற்பது இரவுகளுக்குள் நகங்களை வெட்டி, அக்குள் முடி, மர்ம உறுப்பு முடிகளைக் களைந்து, மீசையைக் கத்தரித்து ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிகாட்டுகின்றது. 

மன ஆரோக்கியம் மனிதனின் கட்டாயத் தேவையே!

பிறர் நலம் நாடுதல்.

உடல் ஆரோக்கியம் எந்தளவிற்கு ஒரு மனிதனுக்கு முக்கியமோ அதேபோல் மன ஆரோக்கியமும் அத்தியவசியமானது. சிலர் உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பினும் மன ஆரோக்கியம் இல்லாத காரணத்தினால் எந்த விடயத்திலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் வாழ்க்கையில் விரக்தியடைகின்றனர். 

இன்று பெரும்பாலான மனிதர்களின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தும் வகையிலும், மனதைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன. இதனால் மனதளவில் நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 10)
         
மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத் தாரி(ரலி)அவர்கள் (நூல்: முஸ்லிம் 82)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.  அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் (நூல்: புகாரி 13)

எனவே, நாம் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருந்தால் நம் நாவினாலும், கைகளினாலும் பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இதனால் மன ஆரோக்கியம் பேணப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.  அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 2320)        

ஒரு முஸ்லிமானவன் தனக்கு எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு பிறருக்கு உதவக்கூடியவனாகவும், பிறர் நலம் நாடக்கூடியவனாகவும் இருக்க வேண்டும். இதனால் தாம் மனநிறைவைப் பெறுவது மட்டுமல்லாமல் பிறர் மனதையும் குளிர்சிசியடையச் செய்ய முடியும். 

பொது இடங்களில் மனச் சங்கடங்களை ஏற்படுத்துதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம், பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.   அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 239)

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் இரண்டு சாபத்திற்குரிய காரியங்களுக்கு பயந்து கொள்ளுங்கள். அந்த இரண்டு காரியங்களும் என்ன இறைத்தூதர் அவர்களே என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். அவை மக்களின் பாதையில் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலஐலம் கழிப்பதும் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: முஸ்லிம் 397)

இன்று சில மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமாக பாதைகளில் நடந்து கொள்கின்றனர். தாம் சுற்றாடலை அசுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றனர். 

எனவே, இஸ்லாம் காட்டிய வழியில் நடந்து நம் உடல, உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பிறர் உடல், உள ஆரோக்கியம் கெடாத வன்னமும் நம் நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக வாழ முயற்சிப்போம்!


நன்றி.சகோதரி ஃபாத்திமா ஷஹானா(கொழும்பு)

1 கருத்து:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்பதிவை படிக்கும்போதே ஒவ்வோர் வரியும் படிப்போர் நெஞ்சில் இஸ்லாம் பற்றி தெளிவாக அறிவிக்கிறது.

அருமையான பகிர்வு சகோ.அபு அஜ்மல். பகிர்வுக்கு நன்றி.

எழுதிய சகோ.ஃபாத்திமா ஷஹானா(கொழும்பு) அவர்களுக்கும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்