ஆகஸ்ட் 15, 2011

எதிரியை வெல்வது எப்படி ?

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள்.



புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது  தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா.


நாம் யாவரும் நல்ல பெயர் வாங்க எத்தனை பாடுபடுகிறோம். நல்லவன் என்று நம்மைப்பற்றி நாமே எத்தனை கதை விடுறோம். யாராவது நம்மை நல்லவன் என்று பாராட்டினால் நாம் உச்சி குளிர்ந்து போகிறோம்.

ஒரு இளவரசி அழகாக தோன்ற வேண்டுமென்பதற்காக அவளைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் கரிபூசி அலங்கோலப்படுத்தி வைத்தார்கள். அப்போதுதானே அந்தப் பெண்களின் மத்தியில் இந்த இளவரசி பளிச்சென்று தெரிவாள்.


உலகமே நாடகமேடை, நாம் யாவரும் நடிகர்கள்”-ஷேக்ஸ்பியர்


வாழ்வில் நமக்கு நாம் கதாநாயகர்களாக வாழ்கிறோம். நமக்கு சில எதிரிகள் (வில்லன்கள்) ஏதோ ஒரு வகையில் முளைக்கிறார்கள்.

நாம் இறைவனின் படைப்பு என்றும் நம் எதிரிகள் சாத்தானின் படைப்பு என்றும் நாம் நினைக்கிறோம். உண்மையில் நம்மை படைத்த இறைவன்தான் நம் எதிரிகளையும் படைத்தான்.

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள். நம் பயத்தை வெல்ல நமக்கு சோதனை வைக்கிறார்கள். அவர்களால் நம் திறமைகள் வெளிப்படுகின்றன.

அவர்களின் கொடூரமான செயல்களால் நமக்கு நற்பெயர்கள் கிடைக்கின்றன. கனத்துப்போன நமது ஆணவம் நம் எதிரிகளால் உடைக்கப் படுகிறது.

விமானம் மேலே எழுவதற்கு அளவான எதிர்காற்று வேண்டும். இழுத்து பிடித்திருக்கும் கயிறு, பட்டத்தை மேலே செல்ல விடாமல் தடுப்பது போல தோன்றும் அந்தக் கயிறு அறுந்து போனால் பட்டம் மேலே நிற்குமா? இது போலவே தங்கள் எதிர்ப்பின் மூலம் எதிரிகள் நமக்கு சேவை செய்கிறார்கள்.

சாலைகளில் சில திருப்பங்களும், சில இடையூறுகளும் இருப்பது நம்முள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்விலும் சில தடைகள், சில சிக்கல்கள், சில விரோதிகள் வரும்போதுதான் வாழ்க்கை பயணத்தில் சப்பு இல்லாமல் செல்கிறது. ஒரு சாதிப்பு இருக்கிறது.

பதிலுக்கு பதில்

நம்மை ஒருவன் திட்டிவிட்டால் பதிலுக்கு நாம் இரண்டு திட்டு திட்டினால்தான் காயப்பட்ட நம் மனது ஆறுகிறது. அன்று இரவு நல்ல தூக்கம் வருகிறது. நம்மை ஒரு அடி அடித்தால் அதற்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுத்தால் தான் நம் மனம் தேறுகிறது.

இப்படி பதிலுக்கு பதில், பழிக்குப் பழி நாம் செய்யாவிட்டால், நம்மால் செய்ய முடியாவிட்டால் நம் மனத்தில் காயத்தின் வடுக்கள் பதிவாகின்றன. அது வஞ்சனையாக உருவெடுக்கின்றது. நம் மனத்தில் அமைதி கெடுகிறது.

இப்படி பதிலுக்குப்பதில் என்று நாம் ஆரம்பிக்கும்போது அது ஒரு சங்கிலிபோல தொடர்கிறது. அப்போது ஒரு சக்கர சூழல் மாட்டிக் கொள்கிறோம். அப்போது நமது இலக்குகள் காணாமல் போய்விடுகின்றன.

இரண்டு சேவல்கள் சண்டை போடுகின்றன. மாறி மாறி கொத்தி மணிக்கணக்கில் சண்டை போட்டு முடிவில் இரண்டுமே சக்தியிழந்து இரத்தக் காயங்களுடன் கீழே சாய்கின்றன. இதுபோல் அநேகரின் வாழ்வு வசந்தங்கள் இல்லாமல் சண்டைகளால் வறண்டு போகின்றன.

நம் எதிராளியின் செயல்கள் அல்லது பேச்சுக்கள் மட்டுமல்ல, அவர் நம்மை பார்க்கும் பார்வைகள் கூட ஏளனமாக இருந்தால் அவரிடம் நேரில் பேச வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும்.

உங்களுக்கு என் மீது ஏதாவது வருத்தம் இருந்தால், நேரடியாக என்னிடம் பேசலாம். அதைவிட்டு நீங்கள் பேசும் விதம், பேசும் வார்த்தைகள் என் சுய மரியாதையை பாதிக்கிறது. நீங்கள் பார்க்கும் ஏளனப் பார்வை என் மனதை புண்படுத்துகிறது.


நீங்கள் இப்படி நடந்து கொள்வதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. இதை என்னால் அனுமதிக்க முடியாது. இது போன்ற உங்கள் செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் பேசிவிட வேண்டும்.

இப்படி பேசும்போது, இதை சற்றும் எதிர்பாராத அவர்கள், நம்மைப் பொறுத்தவரை தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். நமக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பார்கள்.

பிறரிடமிருந்து நமக்கு வேண்டிய மரியாதையை நாம்தான் தெளிவாக முடிவு செய்யவேண்டும்.

அவர்கள், புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால் நாம் எடுத்துச் சொல் நம் மரியாதையை நாம் காப்பாற்றவேண்டும். நம் மரியாதை, கௌரவம் காற்றில் பறக்கும்போது நாம் விழிப்புணர்வு இல்லாமல் மந்தமாக இருந்துகொண்டு பின்பு வருத்தப்படவும், பிறர் மீது கோபப்படுவதும் ஆகாது. இதனால் நம் மனதில் சஞ்சலங்கள் உருவாகும்.

சமுதாயத்தில் நம் சுயமரியாதை (Image) பாதிக்கப்படும். நம் அனுமதி இன்றி யாரும் நம்மை அவமானப்படுத்திவிட முடியாது.

மதிமிக்க மனிதர்கள் பழிக்குப் பழி என்ற அந்த சக்கர வளையத்துக்குள் சிக்குவதில்லை.

நீரு பூத்த நெருப்பு:


நீரில் இருந்து நெருப்பு வருமா? நீரை கொதிக்க வைத்தால்கூட, அந்த சூடான நீர் கூட நெருப்பை அணைக்கவே செய்யும். அதே நீர் தன் அடுத்த நிலையில் நெருப்பை கக்குகிறதே! அது நமக்குத் தெரியுமா!

ஆம்! நீர் சூடாகி நீராவியாக மாறுகிறது. நீராவிகள் மேகங்களாக ஆகாயத்தில் சுற்றுகின்றன. அந்த மேகங்கள் என்ற நீர்த்துளிகளுக்குள் மின் காந்தங்கள் கலக்கின்றன. அந்த மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது நெருப்பு மிகப் பெரிய நெருப்பு உண்டாகின்றன. அதுவே இடி மின்னல்.

அது போலவே மனிதர்கள் தெளிந்த நிலையில், அன்பு நிலையில் இருக்கும் போது அவர்கள் உறவுகளில் உரசல்கள் வருவதில்லை. பதிலுக்குப் பதில் என்ற நெருப்பு பற்றுவதில்லை.

அகந்தை என்ற மின் காந்தம் இல்லாத மனதில் எதிரிகளின் தீ நாக்குகளால் தீயை பற்ற வைக்க முடிவதில்லை.

வலிமை மிகுந்த மிகப்பெரிய விமானம்கூட பறக்கும்போது ஒரு மிகச் சிறிய பறவை மீது மோதும் போது பலத்த சேதமடைகிறது. மிகச் சிறிய பறவை தானே விமானத்தை ஒன்றும் செய்து விடாது என்று நாம் உறுதி கூறமுடியுமா?

நாம் அற்பமாக நினைக்கும் மிகச்சிறிய பலமற்ற எதிரிகூட நம் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும். சிறியவரானாலும், பெரியவரானாலும் நம் எதிரியின் எதிர்ப்புத் தன்மையை எக்காரணம் கொண்டும் நாம் கூர்மை படுத்தக்கூடாது.

அவர்களின் கொம்பைச் சீவி விடும் வேலையை, அவர்களை சீண்டிவிடும் மதியற்ற வேலையை தப்பித் தவறிக்கூட செய்ய மாட்டான் புத்திசாலி.

எதிரிகளை வெல்ல சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதே. அப்போது அவர்கள் பலமும் நம் பலமாகிறது.

முகமது நபியை, அவரது கொள்கைகளை எதிர்த்து நின்ற அவரது எதிரி பின்பு அவரின் மிகப்பெரிய தோழர் ஆனார். அவர்தான் மிகச்சிறந்த கலீபாவான உமர்.

மிகச்சிறந்த மன்னர்கள் தங்கள் எதிரி நாட்டை வென்ற பின்பு அந்த அரசர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறார்கள். மகா அலெக்ஸாண்டர் கூட போரஸ் மன்னனை மரியாதையுடன் நடத்தினார்.


நம் உள்ளத்தில் கேடான எண்ணங்கள் இல்லையென்றால் நமக்கு இந்த உலகிலும் கேடான மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

ஒரு மனிதனின் உயர்ந்த பண்பு எங்கே வெளிப்படுகிறது. அவன் நண்பர்களிடம் நடந்துகொள்ளும் தன்மையிலா? இல்லை அவன் தன் எதிரிகளிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதில்தான் அவனது உண்மையான மறுபக்கம் வெளிப்படுகிறது.

நன்றி .தே.சௌந்தரராஜன். மற்றும் வாஞ்சூரார் வலைதளம் !
ஆதமின் மகனே நீ செய்த தவறுகளை இறைவன் மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றாயே நீ உன் சகோதரன் செய்த தவறுகளை மன்னிக்க மனம் வராதா வரையில் இறைவன் எப்படி உன் தவறுகளை மன்னிப்பான் ???

2 கருத்துகள்:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான பகிர்வு

அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) சொன்னது…

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நன்றி நன்றி !

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்