ஆகஸ்ட் 09, 2011

உம்ரா செய்யும் முறை,பகுதி - 1


உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது.

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புஹாரி 1773)
                                                 
ரமளானில் உம்ரா செய்தல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம் -இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்! என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) கூறுகிறார்- நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை? எனக் கேட்டார்கள். அதற்கவர், எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவருடைய மகனும் (எனது கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றொரு ஒட்டகத்தை விட்டுச்சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்! எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.(புஹாரி 1782)

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

துல்ஹுலைஃபா என்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜுஹ்ஃபா என்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கர்ன் அல்மனாஸில் என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது.


மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி 104, 1832, 4295)

இஹ்ராம் பற்றிய விளக்கம்

"
இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்.
உம்ராவை செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்" என்று கூற வேண்டும்.இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நூல்: முஸ்லிம் 2194, 2195)

இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்

1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. (அல்குர்ஆன் 2:196)

பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு' பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!''என்றார்கள்.(அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி),நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703)

2. நகங்களை வெட்டக் கூடாது.

"உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்பது நபிமொழி.(அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),நூல்: முஸ்லிம் 3653, 3654)

3. நறுமணம் பூசக் கூடாது

யஃலா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வந்தது. உமர்(ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் 'உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!" என்று கூறினார்கள்.(புஹாரி 1536)

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851)

"அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.

4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.

"இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி),நூல்: முஸ்லிம் 2522, 2524)

5. உடலுறவு கொள்ளக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197)

6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.

மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க 'ரஃபத்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.

உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

7. வேட்டையாடுதல் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:94)

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:95)

உங்களுக்கும், ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள். (அல்குர்ஆன்5:96)

இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்

நன்றி – ஆன்லைன் பி ஜே .காம் மற்றும் FRTJ.NET 

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்