ஏப்ரல் 12, 2011

செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்!





இஸ்லாமிய மார்க்கம் பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது.

மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

நம்மில் பலர் இறைவனின் ஆனைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர்.

தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர். அல்லாஹ் இத்தைகயவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான். 

மேலும் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மஹ்ஷரிலே தன்னுடைய அர்ஷின் நிழலிலே இத்தகையவர்களுக்கு இடம் வழங்குகின்றான்.

ஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவும் தினசரிகளில் விளம்பரம் செய்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலரோ ஆரம்பத்தில் வறியவர்களின் மேலுள்ள அனுதாபத்தால் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலையில் இறைவனின் அருளினால் அத்தகைய ஏழைகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தம்மால் உதவி பெற்றவர்களை நோக்கி, ‘என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்’, ‘ நான் தான் நீ இத்தைகய நிலைக்கு உயர உதவி செய்தேன்’, ‘நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?’

என்பது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:
1)பெற்றோரைஏசுபவன்
2)
மதுவில்மூழ்கியிருப்பவன்
3)
செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.
ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்

மேலும்
சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)

எனவே சகோதர சகோதரிகளே! நமது அரும்பாடுபட்டு செய்த, சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிசெயலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அன்றோ?

அல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாக

2 கருத்துகள்:

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

//‘மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:
1)பெற்றோரைஏசுபவன்
2)மதுவில்மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.
ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்//

நல்ல நினைவூட்டல் நன்றி சகோ

வலையுகம் சொன்னது…

அப்புறம் சொல் சரிபார்ப்பை எடுத்து விடவும்

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்